Gold prices rise twice in a single day; people in shock Photograph: (GOLD)
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை ஏற்றத்தை கண்டுவருகிறது தங்கம். கடந்த டிசம்பர் மாதம் சவரன் ஒரு லட்சத்தை தொட்டது வரலாற்றில் முதன்முறை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2026 ம் ஆண்டும் தங்கத்தில் விலை இன்னும் உச்சத்தை தொடும் எனக் கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (05-01-26) ஒரே நாளில் தங்கம் இரண்டு முறை விலை ஏற்றத்தை கண்டுள்ளது. காலை மாலை என இரண்டு முறை விலையேறப்பட்ட செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்தது. இதனால் தங்கத்தின் விலை காலை ஒரு கிராம் 12,680 ரூபாயாக விற்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் திடீரென தங்கத்தின் விலை மேலும் 80 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, தங்கம் இன்று ஒரே நாளில் 160 ரூபாய் விலை உயர்வைக் கண்டிருக்கிறது. இந்த விலை எற்றத்தின் காரணமாக, ஒரு கிராம் தங்கம் 12,760 ரூபாயை எட்டியிருக்கிறது . ஒரு சவரன் தங்கம் 1,02,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது. அதே சமயம் வெள்ளியும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 266 ரூபாயாகவும், ஒரு கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை தான் எனக் கூறப்படுகிறது. வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட திடீர் ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழலை உண்டாக்கியிருக்கிறது. மேலும் வெனிசுலா நாட்டிலுள்ள எண்ணெய் வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளப் போவதாகவும் அறிவிப்பு செய்திருக்கிறது. இது அமெரிக்காவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என நம்பப்படுகிறது. ஆனால் மறுபுறம் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற பல்வேறு நாடுகளும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழல் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி வர செய்திருக்கின்றன. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்றம் கண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow Us