தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சம் தொட்டது. கடந்த ஆண்டு இறுதியில் சவரன் ஒரு லட்சத்தை தொட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அடுத்த ஆண்டு (2026), மேலும் அதிகரிக்கும் என்று கடந்த ஆண்டு இறுதியில் கணிக்கப்பட்டது. அந்த கணிப்பிற்கு ஏற்ப இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள்  போன்ற காரணங்களால் தங்கம் விலை இன்று உச்சம் தொட்டுள்ளது.  

Advertisment

இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஆபரணத்  தங்கம் கிராம் ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஆபரணத்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது, ஒரு கிராம் வெள்ளி, ரூ.5 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து, ரூ.2.92 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தொடர்ந்து சர்வதேச சந்தையில் தொடரும் பொருளாதார சிக்கலால் தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. அதேபோல், அமெரிக்கப் பங்குச் சந்தையும் பெரியளவில் உயரவில்லை. தொடர்ந்து, டாலர் மதிப்பும் கடந்த மூன்று வாரங்களில் பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது. பொதுவாகவே டாலர் மதிப்பு சரியும் போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பு, பிற நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால்  தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.