புதுக்கோட்டைக் கம்பன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கணினி மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அபர்ணா திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவர்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பிறகு கலைராஜனின் அம்மா தமிழ்செல்வி மட்டும் வீட்டில் இருப்பது வழக்கம். இத்தகைய சூழலில் தான் நேற்று (29.01.2026 - வியாழக்கிழமை) வழக்கம் போல கலைராஜனும் அபர்ணாவும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
அதோடு, வீட்டில் இருந்த தமிழ்செல்வி பின்பக்கம் சென்று துணிகள் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது முன்பக்கம் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது முன்பக்க கதவுகள் திறந்து கிடந்தது. கதவுகளை மூடிவிட்டு உள்ளே சென்ற போது பீரோ கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே பார்த்த போது பீரோவில் ஒரு பையில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளைப் பையோடு காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. உடனே தனது மகன் மற்றும் மருமகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்தவர்கள் நகரக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலிசார் வந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரு பெண் தங்க நகைகள் உள்ள பையை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
அந்தப் பெண் யார் என்று போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீட்டில் இருவரும் பகல் நேரத்தில் இருக்கமாட்டார்கள் வயதான தமிழ்செல்வி மட்டுமே இருப்பார் என்பதை நன்கு அறிந்த பெண் தான் இப்படி வந்து திருடி இருக்கலாம் என்கின்றனர். இதே போலக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நகரில் வசிக்கும் பெண் உதவி ஆய்வாளர் வீட்டில் ஆய்வாளரின் கணவரைத் தாக்கிவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல திருக்கோகர்ணம் காவலர் குடியிருப்பில் பட்டப்பகலில் புகுந்து காவலர் வீட்டில் இருந்து தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். புதுக்கோட்டை நகரில் காவலர்களின் வீடுகளைக் குறிவைத்து திருட்டுகள் நடப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us