புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகம் சண்முகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் மனைவி ராஜலெட்சுமி (45). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால், ராஜலெட்சுமி புதுக்கோட்டையில் உள்ள ஒரு செப்பல் கடையில் வேலை செய்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், வழக்கம் போல இன்று (20-11-25) இரவு 8.30 மணிக்கு வேலை முடிந்து அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு வந்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி 200 மீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு தைலமரக் காட்டுப் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது நடுவழியில் மறைந்திருந்த நபர் ஒருவர், மிளகாய் பொடியை தனது முகத்தில் தூவி தான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் மற்றும் 1 பவுன் தங்கச் சங்கிலிகளை மர்ம நபர் அறுத்துச் சென்றுவிட்டதாக வீட்டிற்குச் சென்று கூறியுள்ளார். சங்கிலி பறித்த மர்ம நபர் கைலியுடன் இருந்ததாக கூறியுள்ளார்.

Advertisment

ராஜலெட்சுமி தினசரி குறிப்பிட்ட பஸ்சில் வந்து தனியாக இறங்கிச் செல்வதை நன்றாக அறிந்த நபரே காத்திருந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். இதே ஆலங்குடி சரகத்தில் ஆலங்குடி நகரில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம், லேப்டாப் போன்ற ஏராளமான பொருட்கள் திருடு போனது. இன்று சங்கிலி பறிப்பு நடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.