புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல சம்பவங்களில் வீட்டில் உள்ளவர்களை மிரட்டியே நகை, பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதே போலவே புதுக்கோட்டை நகரில் பெண் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மிரட்டியே நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்திலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதே போல அடுத்தடுத்து பல சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை அதிர வைத்துள்ளது. தனிப்படைகள் அமைத்தும் பயனில்லை. கண்காணிப்பு கேமராக்களில் சிக்கியுள்ள நபர்கள் கூட தேடப்பட்டே வருகின்றனர் என்று  வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

Advertisment

இப்படி மாவட்டம் முழுவதும் திருட்டு பயம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வழிப்பறி சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் செய்புலவயல் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் - பாண்டிமீனா தம்பதி புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு கடையை மூடிவிட்டு தங்கள் குழந்தையுடன் காளிதாஸ் - பாண்டிமீனா தம்பதி பைக்கிள் வீட்டிற்குச் சென்ற போது அவர்களை பின் தொடர்ந்து 2 பைக்குகளில் மாஸ்க் அணிந்து வந்த 4 பேர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாண்டிமீனாவின் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அறுக்க முடியாததால் காளிதாஸின் பைக்கை வழிமறித்து நிறுத்திய மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாண்டிமீனாவின தங்கச் சங்கிலியை கழற்றித்தரச் சொல்லி வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து ஏம்பல் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Advertisment

இதே போல நேற்று இரவு கீரமங்கலத்தில் ஒரு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை தான் கையில் வைத்திருந்த சாவியை போட்டு இரண்டு இளைஞர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும், இன்று காலை கொத்தமங்கலம் கடைவீதியில் தொழிலாளி ஒருவர் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று விட்டு திரும்போது அவரது சைக்கிளை காணவில்லை. இப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நகை, பணம், வாகன திருட்டுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.