சமூகத்தில் தங்கத்திற்கு இணையானது ஆடுகள். லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடுகள் ஒரே இரவில் திருட்டு கும்பல் அள்ளி சென்றது கோவில்பட்டி வட்டாரத்தைக் கதி கலங்க வைத்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமம் சக்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் ஈடுபட்டு வருகிறார். இவர் தன் வீட்டின் அருகில் உள்ள தொழுவத்தில் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம். வழக்கம்போல நேற்று ஆடுகளை கட்டி வைத்தவர் இன்று அதிகாலை எழுந்து பார்க்கும் போது சுமார் 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆடுகள் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகள் கட்டி வைத்திருந்த கயிறுகள் அறுக்கப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த முத்துராஜ் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் காரில் வந்த ஒரு நபர் இரண்டு ஆடுகளையும் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதே போன்று அதே ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செளந்தர் என்பவரது வீட்டிலும் இதே கும்பல் அவர் வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டை திருடி சென்றுள்ளது.
தொடர்ந்து இந்த கும்பல் மூப்பன்பட்டி காலனி பகுதியில் சமுத்திரம் என்பவர் வீட்டில் கட்டப்பட்டிருந்த மூன்று ஆடுகள், புளியங்குளம் ஆறுமுகசாமி என்பவர் வீட்டில் முன்பு கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள், இளையரசனேந்தல் ஆத்தியப்பன் என்பவர் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த ஒரு ஆடு என தங்களது கைவரிசை காட்டி ஆடுகளை திருடி காரில் ஏற்றிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இதற்கிடையில் ஆவல்நத்தம் கிராமம் சக்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ் வீட்டில் திருட்டு கும்பல் ஆடுகளை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இப்படி கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் அடுத்தடுத்து ஒரே இரவில் 9 ஆடுகளை காரில் வந்து திருட்டு கும்பல் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போன்ற ஆட்டுத் திருட்டு கும்பலால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர். தங்கத்திற்கு இணையான லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடுகள் திருடு போவதால் கோவில்பட்டி விவசாய ஏரியா பீதியில் கதி கலங்கி போயிருக்கிறது.
Follow Us