தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து தேர்தல் அறிக்கையையும், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில், முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (17-01-26) அறிவித்தார். அந்த அறிவிப்பில், குலவிளக்கு திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம், அனைவருக்கும் வீடு, மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமியின் முதல் தேர்தல் அறிக்கை தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதை வரவேற்கிறது. மேலும், இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய உண்மையான நிலையில் எங்களுடைய செயல்பாடு தேர்தல் அறிக்கையாக வெளிவரும்” என்று கூறினார்.
இதையடுத்து, களத்தில் புதிய கட்சியாக தவெக இருக்கிறது. இந்த தேர்தலில் தவெக மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “மக்கள் விரோத போக்கை கையாண்டு கொண்டிருக்கிற திமுகவை தோற்கடிக்க வேண்டும். அது தான் திமுகவை எதிர்க்கின்ற தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடைய ஒரே குறிக்கோளாக இருக்கிறது, எண்ணமாக இருக்கிறது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் முதல் படியை கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து எடுத்து வைத்த முதல் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி, அதிமுக தான். மத்தியிலும் மாநிலத்திலும் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கருத்து வேறுபாடுகளை தாண்டி ஒன்று சேர வேண்டும். அப்போது தான் நம்முடைய குறிக்கோளை அடைய முடியும்.
எனவே புதிய கட்சிகள், கூட்டணியில் இன்னும் சேராத கட்சிகள் எல்லாம் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும், மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும் என்ற ரீதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் வாக்காளர்களுடைய என்ணமாக இருக்கிறது. அதை அவர்கள் வரும் நாட்களில் புரிந்துகொள்வார்கள். அதற்கேற்றவாறு நல்ல முடிவுகளை அறிவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த கூட்டணியில் இதுவரையில் சேராத அத்தனை கட்சிகளுக்கும் தமாக அழைப்பு விடுக்கிறது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/18/gkvasan-2026-01-18-11-47-34.jpg)