இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதி பட்ஜெட் குறித்தான விவாதமும், வேளாண் இடைக்கால பட்ஜெட் குறித்தான விவாதமும் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது திமுக - அதிமுக இடையே காரசார வாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், 16வது சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று (20-02-26) நடைபெற்றது. இதை அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்து சட்டப்பேரவைக்கு வராத நிலையில், மற்ற தமிழக எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உரையாடினர்.
அந்த வகையில் பா.ம.க எம்.ஏல்.ஏவும், ராமதாஸின் ஆதரவாளருமான ஜி.கே.மணி பேசியதாவது, “தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றத் தேர்தல் முடிவுற்று நம்முடைய முதல்வர் பொறுப்பேற்றவுடன் அவர் ஆற்றிய உரையை கவனித்தேன். அதில் இது எனது அரசு அல்ல, நமது அரசு என்று சொன்னார். இந்த வார்த்தையை கேட்டு நான் பேர் உவகை கொண்டேன். இது ஏதோ வார்த்தையால் மட்டுமல்ல. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிற நான் சார்ந்திருக்கிற பென்னாகரம் தொகுதியாக இருந்தாலும் சரி, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியாக இருந்தாலும் சரி, பா.ஜ.கவை சார்ந்திருக்கிற நயினார் நாகேந்திரனின் தொகுதியாக இருந்தாலும் சரி உள்ளிட்ட எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற சட்டமன்ற தொகுதிகளுக்கு எல்லாம் கேட்டதை கொடுத்து நிறைவு செய்தவர் நம்முடைய முதல்வர்.
கட்சி மாச்சரியங்கள் இருக்கலாம், வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் கூட இந்த மாமன்றம் வரலாற்று பெருமைக்குரியது என்பதை நினைவுப்படுத்துகிற வகையில் தான் இந்த ஐந்து ஆண்டு காலம் நிறைவேற்றி இருக்கிறோம். இன்று பிரிந்து செல்கிறோம், இந்த வாய்ப்பு கிடைக்காது என்று நேற்றே ஒரு நான் பாடலை சொன்னேன். கல்லூரியில் படித்து, விடுதியில் படித்து வெளியேறுகிற நேரத்தில் பசுமை நிறைந்த பறவைகளே, பாடி திரிந்த பறவைகளே என்று பாடினேன். இங்கே உட்கார்ந்து பேசினோம், பழகினோம், எல்லாம் பிரிந்து போகிறோம். மனசு கஷ்டமாக தான் இருக்கிறது, வருத்தமாக தான் இருக்கிறது. மீண்டும் யார் வருவார்கள் என்பதை அந்தெந்த தொகுதி மக்கள் தீர்மானிப்பார்கள். நான் இதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை, யாருக்கு வாய்ப்பு இருந்தாலும் வருவதற்கு வாய்ப்பு கிட்டும், மக்கல் தீர்ப்பளிப்பார்கள். எல்லோரையும் அரவணைத்து எதிரும் புதிருமான கருத்துக்கள் வந்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்ட மணப்பக்குவம் படைத்த நம்முடைய முதல்வருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உருக்கமாகப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/gkmanimk-2026-02-20-18-02-12.jpg)