பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதற்கிடையே, ராமதாஸ் தரப்பினரும் அன்புமணி தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, நேற்று (25.12.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அன்புமணியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து ஜி.கே. மணியை பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தரப்பு அதிகாரப்பூர்வமாகத் அறிவித்தது. இந்நிலையில் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அன்புமணியை மத்திய அமைச்சராக ஆக்கியவன் நான். அதற்காக நான் ராமதாஸிடம் சண்டை போட்டுள்ளேன். 25 ஆண்டுகாலம் கட்சித் தலைவராக இருந்ததோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் அனுசரித்து நடந்து வருகிறேன்.
அன்புமணியின் இந்த செயலால், எனக்கு ஒரு பக்கம் ஆத்திரம் இருக்கிறது. அவமானம் ஒரு பக்கம் இருக்கிறது. வேதனை ஒரு பக்கம் இருக்கிறது. கட்சியில் ராமதாஸ் தான் ஆலமரம். நான் ஒரு கடுகாக இருந்து செயல்பட்டேன். அவ்வளவு தான். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரிடத்திலும் இணக்கமாக இருந்துள்ளேன். பாமக என்னும் மிகப் பெரிய சக்தி தற்போது நிலைகுலைந்து நிற்கிறது” எனத் தெரிவித்தார். அதே சமயம் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்கி, அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கையெழுத்து இல்லாமல் இருப்பதாகவும், அந்த அறிக்கை செல்லாது எனவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/gk-mani-pm-2-2025-12-26-19-18-31.jpg)