சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று (14-12-25) காலை 9:30 மணிக்கு சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமே, சட்டமன்ற வளாகத்தில் அன்புமணி தரப்பு பாமக எம்.எல்.ஏக்கள் சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க கெளரவத் தலைவயும் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏவுமான ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ அருள் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ம.கவுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ராமதாஸுடன் 45 ஆண்டுகாலமாக பயணித்து வருகிறேன். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு குரல் கொடுக்காத போராடாத பிரச்சனையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ராமதாஸுக்கு இப்படி ஒரு சோதனை. எங்களுக்கும் இது ஒரு சோதனையான நிகழ்வாக தான் பார்க்கிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு. அரசியல் கட்சிகளுக்கு சில சில பிரச்சனைகள் வரும். இருந்தாலும் கூட ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லது. பா.ம.கவின் 5 சட்டமன்ற உறுப்பினர்களையும் நியமித்து கொடுத்துவர் ராமதாஸ் தான். அவர் தான் கட்சியை தொடங்கியவர், அவருக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவருடைய வழியில் தான் நாங்கள் பயணிக்கிறோம்” என்று கூறினார்.
பா.ம.கவில் ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என இரண்டு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்ற வேண்டும் என அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.