தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் மீண்டும் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐபிடிஎஸ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கணிப்பில், திமுகவுக்கு 17.07 சதவீத வாக்கும், அதிமுகவுக்கு 15.03 வாக்கும், த.வெ.கவுக்கு 14.20 சதவீத வாக்கும், காங்கிரஸுக்கு 3.10 சதவீத வாக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
அதனைச் சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், “யாருக்கு வாக்கு? ஐபிடிஎஸ் (IPDS) தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே. சீட்டுகளை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமல்ல, அதிகாரப் பங்கீட்டிற்கும் இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்திருந்தார்.
Advertisment
மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு திமுக முன்னாள் எம்பி அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ''ஆர்எஸ்எஸ் குரலை மாணிக்கம் தாகூர் எதிரொலிக்கிறார். ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவ அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு அவருடையது' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், திமுக முன்னாள் எம்பி அப்துல்லாவின் கருத்துக்கு பதிலளித்துப் பேசுகையில், ''பாஜகவோடு நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைத்ததில்லை. ஆர்எஸ்எஸ்-ஐ நெஞ்சுக்கு நேராக எதிர்த்து நிற்பவன் காங்கிரஸ்காரன். கோட்சே காலத்தில் இருந்து எதிர்த்து நின்றவன். அவர்களோடு எந்த காலத்திலும் சமரசம் செய்யாதவர்கள். யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை தயவு செய்து மரியாதை கொடுத்து மரியாதை வாங்க பாருங்கள்'' என கட்டமாக பதிலளித்துள்ளார். 
Advertisment