மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில், நெய்வேலி என்எல்சி பி.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் வீரவன்னியராஜா தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில், என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், என்எல்சி இன்கோசர்விலிருந்து நிரந்தரமாகும் தொழிலாளர்களுக்கு W3 ஸ்கேல் வழங்க வேண்டும், கிராஜுவெட்டி தர இயலாத தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 2 லட்சம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை 2025-ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்.
என்எல்சி இன்கோசர்வ் மற்றும் கான்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனையை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்கள் அனைவருக்கும் என்எல்சி குடியிருப்புகள் வழங்க வேண்டும்.
என்எல்சி யில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் உடனடியாக வழங்க வேண்டும், என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த சந்திப்பின் போது, என்எல்சி பி.எம்.எஸ். சங்க பொதுச் செயலாளர் சகாதேவராவ், கான்ட்ராக்ட் சங்க பொதுச் செயலாளர் விக்னேஸ்வரன், பாஜக நகர தலைவர் மணிகண்டன், தேசிய கான்ட்ராக்ட் சங்கத் தலைவர் வேலு ராதாகிருஷ்ணன், உதவி பொறுப்பாளர் தொலுங்கானா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.