'தற்கொலை எண்ணம் தவறானது'- மன அழுத்தமோ தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட தமிழக சுகாதார சேவை உதவி மையம் 104-ஐ அழைக்கவும்.
பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தந்தை மதுரையில் பணியாற்றி வரும் நிலையில் தாய் பால் பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி பால் பண்ணைக்கு 15 வயது மகள் வந்துள்ளார். அப்போது அதே பண்ணையில் பால் கறக்கும் பணிக்காக வந்த ராஜேஷ் என்ற நபர் 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் தெரிவித்த நிலையில் பால் பண்ணையில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையில் சிறுமியின் தாயார் புகார் அளித்திருந்தார். நான்கு மாதமாக காவல்துறையினர் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த 15 வயது சிறுமி தற்கொலைக்கும் முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி தற்போது தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.