கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையத்தில் கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கள் படையல் திருவிழா நடத்தப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட கள்ளை பறிமுதல் செய்ய முயன்ற காவல்துறையினருக்கும் பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெண்கள் கையில் இருந்த பையை ஆக்ரோஷமாக பிடுங்கி, அந்தப் பெண்களைக் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், பெண்களைக் கீழே தள்ளிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த கவிதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “கடந்த 17-ம் தேதி நாட்டார்மங்கலம் கிராமத்தில் கள் படையல் திருவிழா நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், அன்றைய தினமே நாங்கள் கச்சிராயப்பாளையத்தில் உள்ள எங்கள் சொந்த நிலத்தில் கள் படையல் திருவிழா நடத்தினோம். அப்போது, நாங்கள் கையில் வைத்திருந்த பனைப் பொருட்களை காவல்துறையினர் பிடுங்கி, பெண்கள் என்று பாராமல் எங்களைக் கீழே தள்ளிவிட்டனர்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அப்போது, காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், கள் படையல் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்றும் ஆட்சியர் கூறினார். இதையடுத்து, கள் படையல் திருவிழா நடத்தலாம் என்ற சட்ட விதிகளை நாங்கள் அவரிடம் எடுத்துச் சொன்னோம். எத்தனை தடைகள் விதித்தாலும், எங்கள் குலத்தொழிலை நாங்கள் கைவிட மாட்டோம். கள் படையல் திருவிழாவை நாங்கள் நடத்தியே தீருவோம். எங்கள் சொந்த நிலத்தில் உள்ள பனை மரத்திலும், தென்னை மரத்திலும் நாங்கள் கள் இறக்குவோம். அதை யாராவது தடுத்தால், அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்,” எனத் தெரிவித்துள்ளார்.