கேரளாவில் அசுத்தமான குளம், குட்டைகள், நீர் நிலைகளில் குளித்ததால் அமீபா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் மூளைக் காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதிப்புக்கு உள்ளவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, மனக்குழப்பங்கள், கழுத்து வலி, நடத்தை மாற்றங்கள், மயக்கங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. உடனடியாக கேரள சுகாதாரத்துறை அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கி அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கேரளாவில் அமீபா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மருத்துவரை சிறுமியின் தந்தை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரச்சேரியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் அமீபா மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்த நிலையில் ஒன்பது வயது சிறுமியின் தந்தை சனூப், மருத்துவர் விபின் பிடியை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர் தனது மகளின் மரணத்திற்கு அவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் விரைவாக வளாகத்தை முற்றுகையிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாமரச்சேரி போலீசார் மருத்துவமனைக்கு வந்து சனூப்பை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.