சென்னை மாங்காடு நகர் அனக்ஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திப்குமார். இவர் லிப்ட் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு இரண்டரை வயதில் பிரனிகா ஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று (22.10.2025) வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிரனிகா ஸ்ரீ பெண் திடீரென காணாமல் போனார். இதனால் அவரை கண்டுபிடிக்க வீடு முழுவதும் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் பிரனிகா ஸ்ரீ கிடைக்கவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டின் பின் பகுதியில் உள்ள குளத்தில் பார்த்துள்ளனர். அப்போது அங்கு தேங்கியிருந்த மழைநீரில் குழந்தை மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரனிகா ஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரனிகா ஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Advertisment

அதே சமயம் இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார், உயிரிழந்த குழந்தை பிரனிகா ஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள குளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.