விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை (09.01.2026) திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காததால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாகவும் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காததால், திரைத்துறையில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு மத்திய பா.ஜ.க அரசு தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து விஜய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளத்தக்கவை என்றாலும், ஒரு கலைஞரின் (விஜய்) படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதாயங்களுக்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சண்டைகளில் கலை மற்றும் பொழுதுபோக்கு பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க உறுதி செய்யுமாறு நாங்கள் (காங்கிரஸ்க் கட்சி) உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/tvk-vijay-angry-1-2026-01-08-18-03-10.jpg)
அதிகாரிகள் மீதான உங்கள் அழுத்தம் காரணமாக விஜய்யின் படம் தாமதங்களை எதிர்கொள்கிறது. இது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைத்து, படைப்பு சுதந்திரத்தை மதிப்போம். பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்த்து உங்கள் 56 அங்குல மார்பு உரிமையை நிரூபிக்கவும். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/girish-chodankar-jana-nayagan-vijay-modi-2026-01-08-17-59-59.jpg)