Girish Chodankar said The seats offered by DMK are not enough for us
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் நேற்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், திமுகவிடம் 39 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை எம்பி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக கூறப்பட்டது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளைத் தாண்டி தேமுதிக, மக்கள் நீதி மய்ய போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளது. இதனால் அந்த கட்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் திமுக தரப்பில் காங்கிரசுக்கு 25 பிளஸ் 1 அளவில் சீட்டுகள் ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், திமுக 25 இடங்கள் தர முன்வந்துள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கிரிஷ் சோடங்கர், “எங்கள் குழுவும் திமுக குழுவும் நேற்று ஒரு மணி நேரம் விவாதித்தன. நாங்கள் சமர்ப்பித்த விருப்பப் பட்டியலை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, ​​எங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் முன்னுரிமையாக உள்ளது. அதனால் சட்டமன்றத்தில் போதுமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பார்கள், இதனால் ராஜ்யசபாவில் எங்கள் சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க முடியும். அவர்கள் எங்களுக்கு 25 இடங்கள் தர முனவந்துள்ளனர், ஆனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நாங்கள் என்ன விரும்புகிறோமோ, அதனை திமுக தேர்தல் குழுவிடம் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.
இதையடுத்து தவெக கூட்டணி சேர்வது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது ஒரு புதிய கட்சி. அவர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் இளைஞர்களிடையே ஈர்ப்பைப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தையும் எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் அங்கீகரித்து வருகின்றனர். இப்போது, ​​திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் நாங்கள் விரும்புவதை அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம்” என்று கூறினார்.
Follow Us