அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற வேண்டும். இந்த விசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு எச்-4 விசா வழங்கப்படும். இதன் மூலம் எச்-1பி விசா பெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவதை ரத்து செய்தார். அதனை தொடர்ந்து ஜோ பைடன், ட்ரம்பின் உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் எச்-4 விசா பெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணி செய்ய முடியும் என்ற நடைமுறை இருந்தது.
இந்த சூழ்நிலையில் புதிதாக அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், எச்-1பி விசா திட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (தோராயமாக 84 லட்சம் இந்திய ரூபாய்) கட்டணம் விதிக்கும் உத்தரவில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை மூலம் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எச்-1பி விசா மூலம் பயன்பெறுவோரில் 71 சதவீதம் இந்தியர்கள் தான். இதற்கிடையில், இந்தியர்களை குறிவைத்து டிரம்ப் எடுத்த இந்த முடிவு அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களில் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், திறமை மிகுந்த இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வந்து பணியாற்றும்படி ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான ஜெர்மனியின் தூதர் பிலிப் ஆக்கர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்திய ஐ.டி நிர்வாகவியல், அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஜெர்மனியில் சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது. ஐரோப்பாவிலேயே ஜெர்மனி தான் மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. ஜெர்மனியில் பணிபுரியும் சராசரி இந்தியர், ஜெர்மனியில் பணிபுரியும் சராசரி ஜெர்மானியரை விட அதிகமாக சம்பாதிக்கிறார். ஏனென்றால் அதிக சம்பளம் என்பது இந்தியர்கள் நமது சமூகத்திற்கும் நமது நலனுக்கும் பெரும் பங்களிப்பை வழங்குவதாகும். நாங்கள் கடின உழைப்பிலும் சிறந்த மக்களுக்கு சிறந்த வேலைகளை வழங்குவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
எங்கள் இடம்பெயர்வு கொள்கை ஒரு ஜெர்மன் காரைப் போலவே செயல்படுகிறது. இது நம்பகமானது, இது நவீனமானது, இது கணிக்கக்கூடியது. இது வளைவு நெழிவு இல்லாமல் நேர்கோட்டில் செல்லும். மேலும் அதிகபட்ச வேகத்தில் முழு இடைவேளைக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. ஜெர்மனி தனது விதிகளை ஒரே இரவில் மாற்றுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.