ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்துள்ளதாகக் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரியை அமெரிக்கா விதித்திருந்தது. அந்த வரி விதிப்பு முறை, நாளை (27-08-25) முதல் அமலுக்கு வரவுள்ளது. இது நாடு முழுவதும் சலசலப்பை உண்டாக்கிய நிலையில், சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச தொலைப்பேசியில் குறைந்தது 4 முறை அழைப்பு விடுத்ததாகவும், அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஜெர்மன் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

Advertisment

ஜெர்மன் செய்தித்தாளான ‘பிராங்பர்டர் அல்ஹீமெயின் ஜெய்டுங்’ (  Frankfurter Allgemeine Zeitung) வெளியிட்டுள்ள அறிக்கையின் நகலை பெர்லினை தளமாகக் கொண்ட குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிடியூடின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான தோர்ஸ்டன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிராங்பர்டர் அல்ஹீமெயின் ஜெய்டுங் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச தொலைப்பேசியில் 4 முறை அழைத்தார். ஆனால், அந்த அழைப்புகளை மோடி மறுத்துவிட்டார். டிரம்பின் அணுகுமுறை, அமெரிக்க சந்தையை மற்ற நாடுகள் சார்ந்திருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. ஆனால், மோடி இதை எதிர்த்தார். இந்தியாவின் பொருளாதார நலன்களை சமரசம் செய்யாமல் தனது பதவிக்காலத்தில் டிரம்புடன் கூட்டுறவு உறவைப் பேணி வருகிறார். இந்த சூழ்நிலையில் மோடியை இணங்க வைக்க டிரம்ப் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்.

இது குறித்து இந்தியர் இன்னும் பேச மறுப்பது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனால், எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக அமெரிக்காவிற்கும், வியட்நாமுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இது பொதுச் செயலாளர் டோ லாமுடனான ஒரு தொலைப்பேசி அழைப்பின் போது பிரதிநிதிகளால் சிரமமின்றி ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு உடன்பாட்டை எட்டாமல், வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்தார். மோடி அதே வலையில் விழ விரும்பவில்லை. இந்தியாவில் கட்டுமானத் திட்டங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. டெல்லிக்கு அருகில் டிரம்ப் குடும்ப நிறுவனம், அவரது பெயரில் ஆடம்பர கோபுரங்களை கட்டியது. 12 மில்லியன் யூரோக்கள் வரை விலை கொண்ட 300 அடுக்குமாடி குடியிருப்புகள் மே மாதத்தின் போது ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால், சமீபத்திய இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை தான் நிறுத்தியதாக டிரம்ப் கூறிய பிறகு, இந்தியா தரப்பில் இது கோபத்தை அதிகரித்தது.

அதன் பின்னர், பாகிஸ்தானுடன் எண்ணெய் இருப்புகளை உருவாக்குவதாக டிரம்ப் அறிவித்தார். பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரை ஓவல் அலுவலகத்தில் இரவு உணவிற்கு டிரம்ப் வரவேற்றார். இது இந்தியாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்த கோபத்தின் ஆழத்தின் விளைவாக, டிரம்ப்பின் தொலைப்பேசி அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் எனக் கூறப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது.  

Advertisment

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடந்த 30 ஆண்டுகள் மேலாக எல்லைகள் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி சீனாவில் நடைபெறும் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நாள் பயணமாக ஜப்பான் நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, அதனனை தொடர்ந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவுக்குச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.