காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.

மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது. இருந்த போதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த முடிவுகளில் இருந்து இந்தியா பின்வாங்காமலேயே இருக்கிறது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது என பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு தொடர்பாக கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஆயுதப்படைகள் உயர்மட்ட அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும். நமது தயார்நிலை 24*7, 365 நாட்கள் என மிக அதிகமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு நிலையான விழிப்புணர்வு தேவை. இராணுவம், போர் மற்றும் அறிவு இரண்டையும் பற்றி அறிந்து கொள்வது அவசியம்” என்று கூறினார்.