இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி (07.10.2023) கடும் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 2 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலில் 18,500க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 64,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி பேச்சுவார்த்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதன்படி, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் மீது நடத்தி வந்த குண்டுவெடிப்பு தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியது.
இதனையடுத்து, பாலஸ்தீனத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து முதற்கட்டமாக படைகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்து எகிப்தில் நாளை (13.10.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொள்வாரா என்பது தான் மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே இது குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பிரதமர் மோடி எகிப்து செல்வதாக இருந்தால் அதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் பிரதமர் மோடி இங்கிருந்தே காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கவும் வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
Follow Us