சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். நாளை (08/07/2025) இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் கொலை விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (07/07/2025) மதுரையைச் சேர்ந்த மகாராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழகத்தை உலுக்கிய மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சம்பவத்தன்று திருபுவனம் காவல்துறையுடன் இணைந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்துள்ளனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையின் போது காயங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிலர் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து அவரது உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், உரியப் பணம் தருகிறோம் என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள். மனித உரிமைக்கு எதிராக காவல்துறை நிகழ்த்திய மரணத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisment

'அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கையும் நாளை சேர்த்து விசாரித்துக் கொள்ளலாம்' என இந்த வழக்கின் விசாரணையை நாளை (08/07/2025) நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

முன்னதாக அஜித்குமார் மரண வழக்கில் அந்த திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறன், பஞ்சாயத்து தலைவரான சேங்கைமாறனின் மனைவி, திமுக செயலாளர் மகேந்திரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித் வீட்டிற்கு சென்று 50 லட்சம் தருவதாக அவருடைய பெற்றோரிடம் சமரசம் பேசினர்' என இவ்வழக்கில் அஜித் தரப்பில் வாதாடி வரும் வழக்கறிஞர் ஹென்றி குற்றச்சாட்டுகளை நீதிபதியின் முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.