Ganga water has arrived at your doorstep says by UP Minister's controversial speech to flood-affected people
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையால் கங்கை, யமுனா, பெட்வா போன்ற ஆறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ஜலான், ஆக்ரா, வாரணாசி, பிரயாக்ராஜ், கான்பூர் தேஹாத், அவுரியா, பல்லியா, ஹமிர்பூர், மிர்சாபூர், பண்டா, சித்ரகூட், எட்டாவா, ஃபதேபூர், மற்றும் கான்பூர் நகர் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தையே புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், கடைகள், கோவில்கள் என அனைத்திலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்ததால், பொதுமக்கள் பள்ளிகள் உள்ளிட்ட பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், நேற்று முன்தினம் (04-08-25) கான்பூர் தேஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சஞ்சய் நிஷாத் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி, ‘தண்ணீர் என் மார்பு வரை உயர்ந்து அந்த வீடு வரை செல்கிறது’ என்று கூறினார். அந்த கிராமவாசிக்கு பதிலளித்த சஞ்சய் நிஷாத், ‘நீங்கள் கங்கையின் குழந்தைகள். தாய் கங்கை நதி, தனது குழந்தைகளின் பாதங்களை சுத்தம் செய்ய உங்கள் வீட்டு வாசலுக்கு வருகிறது. இது உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். கங்கை அழைக்கப்படாமல் வருவது அதிர்ஷ்டம்’ என்று கூறினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, சஞ்சய் நிஷாத் தனது தொண்டர்களுடன் கிராமத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்றனர். அங்கு அமைச்சர் அதிகாரிகளுடன் சேர்ந்து, வெள்ளத்தை ஒரு தெய்வீக நிகழ்வு என்று விளக்கினார். அப்போது வயதான பெண் ஒருவர், ‘அப்படியானால் நீங்களும் இங்கேயே தங்கி கங்கையின் ஆசிர்வாசத்தைப் பெறுங்கள்’ என்று காட்டமாகக் கூறினார். அந்த பெண், அமைச்சரை நோக்கி பேசினாரா அல்லது அதிகாரிகளில் ஒருவரை பார்த்து பேசினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசும்போது பொறுப்புணர்ச்சியில்லாமல் அமைச்சர் ஒருவர் பேசுகிறார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச இன்ஸ்பெக்டர் ஒருவர் வெள்ள நீரை ‘புனித நீரான கங்கை தனது வீட்டைத் தேடி வந்திருக்கிறது’ என்று கூறி மலர் தூவி பால் ஊற்றி மரியாதை செய்து வணங்கி குளித்த சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.