புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருளாந்து மகன் ஸ்டாலின். அறந்தாங்கி - தொண்டி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் 26 ஆம் தேதி அன்று வழக்கமாகப் பணிக்குச் சென்ற அவர், அறந்தாங்கியில் இருந்து திருப்புனவாசல் நோக்கி குறுகலான சாலையில் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஒரு பைக்கிற்கு வழிவிட முடியாமல் ஸ்டாலின் பேருந்தை ஓட்டியிருக்கிறார். இதனால் பைக்கில் சென்றவர்கள் கோபமடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த கும்பல் ஸ்டாலின் ஓட்டிய தனியார் பேருந்து இரவில் திரும்பி வரும் போது, கூடலூரில் வழிமறித்தது. பின்னர் பேருந்தில் ஏறிய அந்தக் கும்பல், ஓட்டுநர் ஸ்டாலினை அடித்து உதைத்து கீழே இழுத்து வந்து பலர் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளனர். பயணிகள் சிலர் அடிக்க வேண்டாம் என்று கதறியும் கூட அந்தக் கும்பல் ஸ்டாலினை விடவில்லை. தொடர்ந்து தாக்கியிருக்கிறது. பிறகு அந்தப் பகுதியில் நின்றவர்கள் தாக்குதலைத் தடுத்து ஓட்டுநர் ஸ்டாலினை மீண்டும் பேருந்தில் ஏற்றிவிட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/untitled-1-2025-10-27-18-59-09.jpg)
பலர் தாக்கிய வலியோடு பேருந்தை ஓட்டி வந்த ஸ்டாலின் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் ஸ்டாலின் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த திருப்புனவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அதனடிப்படையில், கடத்திவயல் மதியழகன், அவரது மகன் ஜெதீஸ்வரன், விஜயா, கருப்பசாமி, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வென்னாத்தூரைச் சேர்ந்த சதீஸ்வரன், ராமநாதபுரம் மாவட்டம் அகத்தியர்கோட்டையைச் சேர்ந்த பவின்ராஜ் ஆகிய 6 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே, பைக்குக்கு வழி விடாததால், தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக அந்த கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us