மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் மாரிமுத்துவின் மகன் கருமலை (வயது 26) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெருங்குடி காவல்துறையினர், கருமலையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
ஆனால், உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சுமார் ஒரு மணி நேரம் உடலை எடுக்க விடாமல் தடுத்து தகராறு செய்தனர். உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதாக காவல்துறையினர் உறுதியளித்த பின்னர், உறவினர்கள் உடலை மீட்க அனுமதித்தனர். உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது.
கருமலை மற்றும் முனியாண்டியின் மகன் பாலமுருகன் (வயது 26) நண்பர்களாவர். இவர்கள் இருவரும் முன்னர் பெருங்குடி பகுதியில் ஏப்ரல் மாதம் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகளாக இருந்து சிறையில் இருந்தனர். கருமலை முதல் குற்றவாளியாகவும், பாலமுருகன் ஆறாவது குற்றவாளியாகவும் இருந்தனர். சிறையில் இருந்து விடுதலையான பின்னர், கருமலை மற்றொரு ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
இந்நிலையில், கருமலை இன்று கீரைத்துறை பகுதியில் இருந்து பெருங்குடி அம்பேத்கர் நகருக்கு தனது நண்பர் பாலமுருகனைப் பார்க்க வந்தார். இதனை அறிந்த ஆறு பேர் கொண்ட கும்பல், மூன்று வாகனங்களில் வந்து கருமலை மற்றும் பாலமுருகனை விரட்டி கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கருமலை உயிரிழந்தார், மேலும் பலத்த காயமடைந்த பாலமுருகன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலை முனீஸ்வரன் கொலை வழக்கு தொடர்பாக பழிக்குப் பழியாக நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளாகக் கருதப்படும் ஆறு பேரைத் தேடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) மன்சூர் நாகர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.