ஹரியானா மாநிலம் ஹிசார் நகரைச் சேர்ந்தவர் 57 வயதான ரமேஷ் குமார். ஹரியானா மாநில காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், 6ஆம் தேதி இரவு ஹிசார் நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் இருந்துள்ளார். அந்நேரத்தில் ஒரு கும்பல் வீட்டின் வெளியே நின்று வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியும் பேசியிருக்கின்றனர். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த ரமேஷ் குமார், வீட்டின் வெளியே தகராறு செய்தவர்களை எச்சரித்து, “இதுபோன்று வீட்டின் முன்பு நின்று கத்திக்கொண்டிருக்கக் கூடாது; உடனடியாகக் கிளம்புங்கள்” என்று கூறியிருக்கிறார். அதன்பின் அந்தக் கும்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து, கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மேலும் சிலருடன் மீண்டும் அங்கு வந்த கும்பல், ரமேஷ் குமாரின் வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டிருக்கிறது. இதையடுத்து மீண்டும் வெளியே வந்த ரமேஷ் குமார், அவர்களிடம் “ஏன் கத்துறீங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டிருக்கிறார். அப்போது ரமேஷைத் திட்டிய அந்தக் கும்பல், செங்கல் மற்றும் தாங்கள் கொண்டு வந்த கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ரமேஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் இதனைத் தடுத்து நிறுத்துமாறு கதறினர். அருகே இருந்தவர்களிடம் உதவியும் கோரியிருக்கின்றனர். ஆனால், அதற்குள் அந்தக் கும்பல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டது.
இதனிடையே அந்தக் கும்பல் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எஸ்.ஐ. ரமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எஸ்.ஐ. ரமேஷ் குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்று தீவிரமாக விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டது ரமேஷ் குமார் வசிக்கும் அதே சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டு 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. ரமேஷ் குமார் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெறவுள்ளார். அவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். வீட்டின் வெளியே நடந்த தகராறைத் தட்டிக்கேட்ட போலீஸ் உ.ஆ. ரமேஷ் குமார் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us