தமிழ்நாட்டில் பல்வேறு வகையான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. வழிப்பறி, வீட்டின் பூட்டுகளை உடைத்து திருடுவது, வீட்டுக்குள் இருக்கும் ஆட்களைக் கத்தி காட்டி மிரட்டி நகை, பணம் பறித்துச் செல்வது, பைக்குகளில், கார்களில் வந்து ஆடுகளைத் திருடுவது என இப்படி பலவகையான திருட்டுகளில் இளைஞர்கள் பல குழுக்களாகச் சுற்றி வருகின்றனர். இதில் ஒன்றுதான் வங்கி வாசலில் காத்திருந்து அதிக பணம் எடுத்து வரும் வாடிக்கையாளர்களைப் பின்தொடர்ந்து பணத்தைத் திருடுவது. இப்படியொரு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி பதிவுகளை வைத்து தற்போது ஆலங்குடி தனிப்படைக் காவலர்கள் பிடித்துள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் பிரபு. இவர் தனது குடும்பத் தேவைக்காக ஆலங்குடியில் உள்ள ஒரு வங்கியில் தனது நகைகளை அடகு வைத்து ரூ.1.40 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். பின்னர் வங்கி வாசலில் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியின் இருக்கையைத் திறந்து பணத்தை வைத்துவிட்டு, தன் மனைவியுடன் அருகிலுள்ள கடையில் டீ குடிக்கச் சென்றுள்ளார். சில நிமிடங்களில் திரும்பி வந்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, மொத்த பணமும் காணவில்லை.

பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபு, உடனே ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றப்பிரிவு குழுவை விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான குற்றப்பிரிவு குழு, வங்கிப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு இளைஞன் பலமுறை வந்து சம்பந்தப்பட்ட ஸ்கூட்டியைப் பார்த்துச் செல்வது தெரிந்தது. 

அதனடிப்படையில் விசாரித்தபோது, அந்த நபர் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் மண்டை செந்தில் (எ) செந்தில்குமார் என்பதும், அவர் தற்போது திருச்சியில் தங்கியிருந்து, திருச்சி திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் சேர்ந்து வங்கி வாசலில் காத்திருந்து பணம் திருடுவதாகவும், திருச்சியில் மட்டும் அந்த நபரின் மேல் 10 வழக்குகள் உள்ளதாகவும் திருச்சி போலீசார் கூறியுள்ளனர். இந்தத் தகவல்களைச் சேகரித்த ஆலங்குடி குற்றப்பிரிவு குழு, மண்டை செந்தில் இருக்கும் இடத்தை அறிந்து கோவைக்கு விரைந்து, செந்திலையும் அவனது கூட்டாளியான திருச்சி திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாரையும் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இருவரான விஷ்ணு வெங்கடேஷ், குணசீலன் ஆகியோரை திருச்சியில் வைத்து கைது செய்தனர்.

Advertisment

ஆலங்குடி கொண்டுவந்து நடந்த விசாரணையில், "மண்டை செந்தில் நோட்டம் பார்ப்பார். ஸ்கூட்டர் இருக்கையில் பணம் வைப்பதைப் பார்த்ததும், எங்களுக்கு சமிக்ஞை மூலம் தகவல் சொல்வார். நாங்கள் வண்டியைச் சுற்றி நின்று பெட்டியைத் திறந்து பணத்தை எடுப்போம். பணம் கைக்கு வந்ததும், பைக்குகளில் வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்குப் போய் குடித்துவிட்டு மட்டன், சிக்கன், மீன் சாப்பிட்டு, பெண்களுடன்  தனிமையில் இருந்துவிட்டு, பணம் முடிந்ததும் அடுத்த இடத்திற்கு போய்விடுவோம்.

அதேபோல்தான் ஆலங்குடியில் அந்த வங்கி வாசலில் நின்றோம். அப்போது அந்த ஸ்கூட்டியில் கட்டாகப் பணம் வைப்பதைப் பார்த்தோம். மண்டை செந்தில் பலமுறை வந்து பார்த்தார். அவர்கள் பணத்தை வைத்துவிட்டு டீ குடிக்கப் போனதும், நாங்கள் ஸ்கூட்டர் இருக்கையைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். கொஞ்ச தூரம் போய், தலா ரூ.34 ஆயிரம் பணத்தைப் பிரித்துக்கொண்டு, நேராக வேளாங்கண்ணி போய், வழக்கம்போல குடித்துவிட்டு, பெண்களுடன் கும்மாளம் அடித்துவிட்டு ஊருக்கு வந்தோம். மண்டை செந்திலும் ராஜ்குமாரும் கோயம்புத்தூரில் சிக்கினர், அதனால் நாங்களும் சிக்கினோம்," என்று கூறியவர்களிடமிருந்து காவலர்கள் ரூ.70 ஆயிரம் மட்டுமே மீட்டுள்ளனர்.

துரிதமாகச் செயல்பட்டு திருடர்களைப் பிடித்த ஆலங்குடி குற்றப்பிரிவு காவலர்களை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisment