விழுப்புரத்தில் கஞ்சா போதையில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் காவல் நிலையத்திற்கு வந்து ரகளை செய்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சிலர் கஞ்சா போதையில் சண்டையிட்டுக் கொள்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக திண்டிவனம் காவல் நிலைய தலைமைக் காவலர் முருகையன் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்பு என்கின்ற ஆகாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கஞ்சா போதையில் பயணி ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆகாஷிடம் காவலர் முருகையன் கேள்வி எழுப்பிய நிலையில் அவரை ஆபாசமாகப் பேசிய அந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு மேலும் சில காவலர்கள் வந்தனர். காவலர்களை கண்டவுடன் அப்பு என்கிற ஆகாஷ் மற்றும் சிற்றரசு உள்ளிட்ட மூவர் தப்பி ஓடிவிட்டனர். அதில் ராஜேஷ் என்பவர் பிடிப்பட்ட நிலையில் அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் பிடிபட்ட ராஜேஷின் சகோதரர்கள் சேட்டு, பாலாஜி, மற்றும் சிற்றரசு ஆகியோர் கஞ்சா போதையில் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு வந்து உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவல் அவர்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விட்டனர். மறைத்து வைத்திருந்த பிளேடை தங்களின் உடம்பில் பல்வேறு இடங்களில் கீறி ரத்தத்தை வர வைத்து பயம் காட்டினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.