கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும் வீடுகளை குறித்து வைத்து நடக்கும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசரிவர்மன். இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக, கேசரிவர்மன் குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்து அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில், தனது இரண்டாவது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக, குடும்பத்துடன் தனது சொந்த ஊரான கடுவனூருக்கு வந்தார். வரும் 7-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவிருந்தது.
இதற்கிடையே, தனது பாஸ்போர்டை புதுப்பிப்பதற்காக கேசரிவர்மனும் அவரது குடும்பத்தினரும் 2-ஆம் தேதி மாலை சென்னைக்குச் சென்றனர். வீட்டில் கேசரிவர்மனின் பெற்றோர் முனியனும் பொன்னம்மாளும் மட்டுமே தனியாக இருந்தனர். இதனை அறிந்த முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல் ஒன்று, அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று, முனியனையும் பொன்னம்மாளையும் கடுமையாகத் தாக்கி, தனி அறையில் அடைத்தது. பின்னர், வீட்டில் நகை, பணம் எங்கு உள்ளன என்று அவர்களைச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், "சத்தமிட்டால் உங்களைக் கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டி, நகைகள் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். "எங்களுக்கு எதுவும் தெரியாது" என்று அந்த வயதான தம்பதி கூறியபோது, "வாயை மூடி சும்மா இருங்கள், ஒழுங்காகப் பணம் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்" என்று அச்சுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மற்றொரு அறையில் இருந்த பீரோவைப் பார்த்த கொள்ளைக் கும்பல், கடப்பாறையால் உடைத்து, அதில் இருந்த 200 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. உடனடியாக, முனியன் தனது மகன் கேசரிவர்மனுக்கு தொலைபேசியில் கொள்ளைச் சம்பவம் குறித்துத் தெரிவித்தார். பின்னர், அவர் அளித்த தகவலின் பேரில், சங்கராபுரம் காவல்துறையினருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ரஜத் சதுர்வேதியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினார்.
அத்துடன், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டன. அப்போது, ஏஸ் என்ற மோப்ப நாய், கொள்ளை நடந்த வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று, பாக்கம் ஊராட்சியில் உள்ள ராமலிங்கம் என்பவரது வீட்டில் நின்றது. உடனடியாக அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்தது. கேசரிவர்மனின் வீட்டில் கொள்ளையடித்த கும்பல், முதலில் ராமலிங்கத்தின் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக நுழைந்திருந்தது. ஆனால், ராமலிங்கம் கத்திய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
அதன்பிறகு, கேசரிவர்மனின் வீட்டில் புகுந்து, பெற்றோரைத் தாக்கி, 200 பவுன் தங்க நகைகளைத் திருடிவிட்டு, அந்தக் கும்பல் தப்பிச் சென்றிருக்கிறது.ஒரு மாதத்திற்கு முன், ராமலிங்கம் தனது மகளுக்கு திருமணத்தை நடத்தி முடித்திருந்தார். அதே நேரத்தில், கேசரிவர்மன் தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காகவே குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், சுப நிகழ்ச்சிகள் நடந்த அல்லது நடக்கவுள்ள வீடுகளைக் கொள்ளையர்கள் நோட்டமிட்டு, கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி வருவது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.