ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிபந்த் படேல். இவருக்கும் கந்தமால் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று (22-02-26) திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்து மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் தர்பா சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது, அவர்களின் வாகனத்தை மூன்று மர்ம நபர்கள் வழி மறித்தனர். அப்போது, அந்த நபர்கள் துப்பாக்கியைக் காட்டியதால் அனைவரும் அதிர்ந்து போயினர். அவர்கள் துப்பாக்கியைப் பார்த்துப் பயந்த இருந்த சமயத்தில் அந்த நபர்கள் மணப்பெண்ணைக் கடத்தி சென்றனர்.

Advertisment

மணமகன் ஹரிபந்த் உட்பட அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என எதுவும் புரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். இதையடுத்து, தர்பா காவல் நிலையத்தில் ஹரிபந்த் தனது மனைவியை மர்ம நபர்கள் கடத்தியதாகப் புகார் அளித்தார். புகாரையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மணப்பெண்ணைக் கடத்தி சென்றவர் அவரது முன்னாள் காதலன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

இது குறித்துப் பேசிய தர்பா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் அனிதா கிடோ கூறுகையில், ‘ஹரிபந்த் தனது திருமண சடங்குகளுக்காக கந்தமால் பகுதிக்குச் சென்றிருந்தார். சடங்குகளை முடித்துவிட்டு அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ​​தர்பா சாலையில் உள்ள படாபந்தா அருகே துப்பாக்கி முனையில், அவரது மனைவியைக் கடத்தி சென்றுள்ளனர். தற்போது, அது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்ணை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.