தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் 54 வயது முருகேசன். இவருக்கு முத்து லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முருகேசன், ஆறுமுகநேரியில் இருந்து காயல்பட்டினம் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள செக் போஸ்ட் அருகேயுள்ள சுடலைமாடன் சுவாமி கோவிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். மாந்திரீகம், குறி சொல்வது உள்ளிட்ட தொழில்களுக்காக வெளியூர்களுக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதி அன்று நண்பகலில், பூசாரி முருகேசன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மின்சாரம் இல்லாததால் காற்றோட்டத்திற்காக சுடலைமாடன் சுவாமி கோவிலுக்கு சென்று, பீடம் அருகே துண்டை விரித்து உறங்கியுள்ளார். மாலை 3 மணியளவில், தனது மனைவி லட்சுமிக்கு தொலைபேசி மூலம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லியுள்ளார். சிறிது நேரத்தில், லட்சுமி தண்ணீருடன் சென்றபோது, முருகேசன் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். இதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் தங்கராஜ், எஸ்.ஐ. சுந்தரராஜ் மற்றும் போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து, முருகேசனின் உடலை கைப்பற்றி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சுடலைமாடன் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கொடை விழா நடைபெறுவது வழக்கம். 2023ஆம் ஆண்டு நடந்த கொடை விழாவில், பூசாரி முருகேசன் சாமியாடி அருள்வாக்கு சொல்லிக்கொண்டிருந்தபோது, ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த இசக்கி முத்துவுக்கும், பூசாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. "என்னுடன் மோதிட்டிலடா... உன்னை வாழவிட மாட்டேன்" என்று இசக்கி முத்து சவால் விட்டுள்ளார். காவல்துறையினர் தலையிட்டு சமரசம் செய்தனர்.
2024ஆம் ஆண்டு கோவில் கொடை விழா காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. இருப்பினும், இசக்கி முத்து தொடர்ந்து முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததால், இந்த ஆண்டு கொடை விழா நடைபெறவில்லை. இதன் தொடர்ச்சியாக, சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இசக்கி முத்து, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூசாரி முருகேசனை கோவிலில் வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த 26 வயது இசக்கி முத்து, அவரது கூட்டாளிகளான 25 வயது மாரி செல்வம், ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த 27 வயது சுகுமார், கொழுவை நல்லூரைச் சேர்ந்த 54 வயது சங்கரவேல் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான நான்கு பேர்மீதும் ஆறுமுகநேரி, ஆத்தூர், நாசரேத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இதுவரை, மொத்தம் 20 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டாலும், கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி