எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் எட்டயபுரம் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 10ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகப்படும்படியாக வந்த ரேஸ் பைக் ஒன்றை தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கில் வந்தவர்கள் போதையில் இருந்ததால், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவைச் சேர்ந்த 19 வயதான அஜய், 18 வயதான ஆகாஷ், கோவில்பட்டி சீனிவாச நகர் சேர்ந்த 23 வயதான தினேஷ் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவர்கள் கோவில்பட்டிக்கு சினிமா பார்க்கச் செல்வதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து நம்பர் பிளேட் எங்கே என்று போலீசார் கேட்டபோது, வீட்டில் பத்திரமாக இருப்பதாக அஜய் தெரிவித்துள்ளார். நம்பர் பிளேட்டை எடுத்து வந்து காண்பித்துவிட்டு பைக்கை எடுத்துச் செல்லுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அஜய் வீட்டிற்குச் சென்று நம்பர் பிளேட்டை எடுத்து வந்து காண்பித்துள்ளார். அதுவரை மற்ற இருவரும் காவல்நிலையத்திலேயே இருக்கவைக்கப்பட்டனர். அதன்பிறகு போலீசார் அந்த மூன்று போதை இளைஞர்களுக்கு புத்திமதி கூறி பைக்கை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து புறப்பட்ட போதை கும்பல் காவல் நிலையத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஸ்கார்ப்பியோ கார் அருகே சென்றுள்ளனர்.
பின்னர் காரில் இருந்த ஓட்டுனர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவரிடம் 3 பேரும் புகையிலை கேட்டுள்ளனர். அவர் புகையிலை இல்லை எனக் கை விரிக்கவே, போதையில் இருந்த கும்பல் அவரை அடித்து காரில் இருந்து இழுத்து கீழே தள்ளியுள்ளது. மேலும், அவரிடமிருந்து மொபைல் போனையும் 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து, ஸ்கார்பியோ காரை எடுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளனர். மூவரில் காரில் இருவர் தப்பிச் செல்ல, மற்றொருவர் பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து எட்டயபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி மற்றும் மாவட்ட எல்லைகளில் செக் போஸ்ட்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பலைத் தீவிரமாகத் தேடினர். எட்டயபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் கார் செல்வதை கண்டுபிடித்த போலீசார், அந்த ரூட்டில் விரட்டிச் சென்றனர். கீழ ஈரால் சந்திப்பு அருகே அந்தக் கடத்தல் கார் இரும்புத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்த ஆகாஷ், தினேஷ் ஆகிய இருவரும் பின்னாடியே அஜய் ஓட்டி வந்த பைக்கில் ஏறி மூன்று பேரும் தப்பிச் சென்றனர்.
போலீசார் அவர்களைக் கசவன்குன்று காட்டுப் பகுதியில் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். மேலும், காரையும் மீட்டனர். கைதான ஆகாஷ், தினேஷ், அஜய் ஆகிய மூன்று பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தினேஷ் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிரைம் வழக்குகளும், அஜய் மீது இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்பர் பிளேட் இல்லாமல் கஞ்சா போதையில் வந்தது மட்டுமில்லாமல் புத்திமதி சொல்லி அனுப்பிய போலீசுக்கே சில நிமிடங்களில் தலைவலி கொடுத்து கார் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
Follow Us