ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த மெட்டரை சின்னியம்பாளையத்தில் உள்ள தென்னை மரத் தோப்பில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டு வருவதாக, கொடுமுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அப்பாத்துரை தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசாரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மெட்டரை சின்னியம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்(27), அரவிந்த்(25), திருப்பூர் மாவட்டம் முத்தூரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமத்தையத்தைச் சேர்ந்த சிவ செந்தில்குமார்(35), சாலைப்புதூரைச் சேர்ந்த அருள்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார், 4 சேவலை பறிமுதல் செய்தனர்.