Advertisment

“அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படக்கூடாது” - அன்புமணி

2

“அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்” என அன்புமணி வழியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ,  அந்த ஏமாற்று வேலையை ககன்தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது திமுக அரசு. பேடி குழுவை அதன் இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வைத்திருப்பதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

Advertisment

ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் திமுகவின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதாலும், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்ததாலும் நிலைமை சமாளிப்பதற்காக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4&ஆம் தேதி அரசு அமைத்தது. இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், இப்போது மீண்டும்  ஒரு குழுவை அமைப்பது ஏமாற்று வேலை; குழுவின் அறிக்கையை பெறுவதை தாமதப்படுத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றும் என்று எச்சரித்திருந்தேன். எனது எச்சரிக்கை இப்போது உண்மையாகிருக்கிறது.

Advertisment

தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருக்க வேண்டிய ககன்தீப்சிங் பேடி குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறது. அதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல்  கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு  தேவைப்படுவதாகவும் ககன்தீப்சிங் குழு கூறியுள்ளது. இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும்  என்பது அறிவிக்கப்படவில்லை. இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது; அவற்றின் மூலம் ஏராளமான  தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனால், குழு அமைக்கப்பட்ட பிப்ரவரி 4&ஆம் தேதியில் தொடங்கி இன்று வரையிலான 8 மாதங்களில் இவை செய்து முடிக்க முடியாத பணிகள் அல்ல. ஆனால், இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கக் கூடாது என்று அரசும், ககன்தீப்சிங் குழுவும் செய்த கூட்டுச் சதியின் காரணமாகவே இப்போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை.

ககன்தீப்சிங் குழு கடந்த பிப்ரவரி 4&ஆம் தேதியே அமைக்கப்பட்டு விட்ட போதிலும், அடுத்த 6 மாதங்களுக்கு அந்தக் குழு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில்  அறிக்கை வெளியிட்டிருந்தேன். மேலும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம்  விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறேன். அதனால் ஏற்பட்ட அழுத்தங்களின்  காரணமாகத் தான் ஆகஸ்ட் 18&ஆம் தேதி முதல் ககன்தீப்சிங் குழு அரசு ஊழியர்களிடம் கருத்துக் கேட்கத் தொடங்கியது. இப்பணியை பிப்ரவரி மாதமே தொடங்கியிருந்தால் 3 மாதங்களுக்கு முன்பாகவே முழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கலாம்.

அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் அதன் மீது முடிவெடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் ககன்தீப்சிங் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது திட்டமிட்ட சதி என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாட்டுகிறேன். இது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டதே தேவையற்ற வேலை தான். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 27-.11.2018ஆம் நாள் அதன் அறிக்கையை அன்றைய அரசிடம் தாக்கல் செய்து விட்டது. அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் புதிய குழுவை திமுக அரசு அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.

ககன்தீப்சிங் குழுவின் இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது தெரியாத நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது.

எனவே, ககன்தீப்சிங் பேடி குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று காரணங்களைத்  தேடிக் கொண்டிருக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

anbumani tn government dmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe