fully healthy after 79 days of treatment 790 gram baby born at 26 weeks
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி வட்டம், பூ.பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் - முத்துமாரி தம்பதியினருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி 26 வார குறைபிரசவத்தில் 790 கிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. த. ஜெயசிங்கின் வழிகாட்டுதலின் பேரில், குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவர் மரு. செந்தில்குமரன் தலைமையில், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் குழந்தைக்கு செயற்கை சுவாசம், நுரையீரல் வளர்ச்சிக்கான உயரிய மருந்துகள், கங்காரு தாய் பராமரிப்பு உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
தொடர்ந்து 79 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தையின் உடல் எடை 1500 கிராமாக அதிகரித்து, முழு ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. அரவிந்த்பாபு மற்றும் உறைவிட நிலைய மருத்துவர் மரு. வைஷ்ணவி ஆகியோர் உடனிருந்தனர். கடந்த ஆண்டு இதுபோன்று குறைபிரசவத்தில் மிகவும் குறைந்த எடையுடன் அனுமதிக்கப்பட்ட 20 குழந்தைகள், தீவிர சிகிச்சைக்குப் பின் முழு ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அது என்ன கங்காரு தாய் பராமரிப்பு?
பிறந்த குழந்தைகளை, குறிப்பாக முன் காலத்தில் அல்லது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கும் அறிவியல் முறைதான் கங்காரு தாய் பராமரிப்பு. இதில், குழந்தையானது தாயின் மார்பில் நேரடியாகத் தோல்-தோல் தொடுதலுடன் வைத்துப் பராமரிக்கப்படுகிறது. இந்த முறையால் குழந்தையின் உடல் வெப்பநிலை சீராக இருந்து, மூச்சு மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்காகும். தாய்ப்பால் ஊட்டம் எளிதாகி, நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது. தாய் - குழந்தை உணர்ச்சிப் பிணைப்பும் வலுப்பெறுகிறது. முன் காலப் பிறப்பு மற்றும் குறைந்த எடை குழந்தைகளுக்கான பாதுகாப்பான, செலவு குறைந்த பராமரிப்பு முறையாக உலக சுகாதார நிறுவனம் கங்காரு தாய் பராமரிப்பை பரிந்துரைக்கிறது. குழந்தை நலனுக்கான அறிவியல் தீர்வு இது!
Follow Us