பொதுவாக, அரசு எந்திரம் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காகவே அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாறினாலும், அமைச்சர்கள் மாறினாலும், அரசுப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்பதே அதன் அடிப்படை தத்துவம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி, துறைத் தலைவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என அத்தனை அரசு ஊழியர்களும் தினமும் தத்தம் பொறுப்புகளைச் செய்து வருகின்றனர். வெயில் கொளுத்தினாலும், மழை கொட்டினாலும், புயல் தாக்கினாலும் -மக்களுக்கான அரசுப் பணிகள் தொடர்ந்தே ஆக வேண்டும்.
அந்த அடிப்படையில்,விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நாளில், நமக்குத் தெரிந்து நடைபெற்ற அரசுப் பணிகள் எவை என்பதைப் பார்ப்போம். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார். சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில், “உலகம் உங்கள் கையில்” என்ற கருப்பொருளின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச மடிக்கணினிகளை அவர் பார்வையிட்டு, டிஜிட்டல் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வெங்கடாசலபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று, கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்களின் பயன்கள், தற்போதைய நிலை மற்றும் மக்களின் எதிர்கால தேவைகள் குறித்து கருத்துகளை சேகரிக்கும் “உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக் கடையை நேரில் பார்வையிட்டு, அத்தியாவசியப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பைச் சரிபார்த்தார். சாத்தூர் நகராட்சி, தில்லை நகரில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்கும் படிவம்–6 வழங்கும் பணிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலராக ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பணிகளில் வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/28/759-2026-01-28-19-01-45.jpg)