கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலை நகர் உள்ளிட்ட மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நடவு வயல்களில் மழைநீர் சூழ்ந்தது.

Advertisment

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்தம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி,அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பகல், இரவு என பலத்த கனமழை பெய்து வருகிறது.

Advertisment

சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதியில் திங்கள் கிழமை இரவு மட்டும் 20 செ மீ மழை மாவட்டத்திலே அதிக அளவாக பதிவாகியுள்ளது. அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் பெய்த கனமழையால் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பயணாளிகள், உதவியாளர்கள் செல்லும் வழி மற்றும் மருத்துவமனையின் கீழ் தளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மருத்துவப் பயனாளிகளை மருத்துவமனையில் முதல் தளத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டது. அதேபோல் சிதம்பரம் நடராஜர் கோவில் குளம் நிரம்பியாதல் குளத்திற்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisment

இந்த மழையால் கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சி.சாத்தமங்கலம், சக்திவிளாகம், வெள்ளியக்குடி, பரதூர், பொன்னங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் நெல் பயிர் நடவு நடப்பட்டுள்ள வயல்களில் மழை நீர்  சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மணி கொல்லை கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவரின் வீட்டில் வெளியே கட்டப்பட்டிருந்த மாட்டின் மீது செவ்வாய் கிழமை அதிகாலை பனை மரம் விழுந்து மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.

காட்டுமன்னார்கோவில் அருகே தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அண்ணாமலை நகர் பகுதிக்குட்பட்ட மாரியப்பா நகர் பகுதியில் சில இடங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியது. அதை அகற்றும் பணியில் அண்ணாமலைநகர் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அக். 21-ஆம் தேதி இந்த 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அக் 22-ந் தேதி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து பொதுமக்கள், திறந்த வெளியில் நிற்கக்கூடாது, நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லக்கூடாது, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கும், புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.