கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த தொட்டமஞ்சு மலை கிராமத்தைச் சேர்ந்தவர் டிரைவரான மாதப்பன் (40). இவர், கடந்த 18-ம் தேதி, தொட்டமஞ்சு கிராமத்தை ஒட்டியுள்ள சித்தப்பனூர் ஏரிக்கரையில் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து வந்த அஞ்செட்டி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

விசாரணையில், மாதப்பனைக் கொலை செய்தவர், அதே பகுதியில் அவரது வீட்டருகே வசிக்கும் 25 ஆண்டு கால பால்ய நண்பரான, 31 வயதான ஜேசிபி ஆபரேட்டர் மாரப்பா என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கொலையாளி மாரப்பாவைப் பிடிக்க, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 24-ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த மாரப்பாவை அங்கு சென்ற போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாரப்பாவை, அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அவரிடம் கொலை தொடர்பாக நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த தொட்டமஞ்சு மலை கிராமத்தைச் சேர்ந்த டிரைவரான மாதப்பனும், அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ஜேசிபி ஆபரேட்டரான மாரப்பாவும், சிறுவயதில் இருந்து, அதாவது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, பால்ய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் அருகிலுள்ள கர்நாடக மாநிலத்திற்கு ஜேசிபி ஓட்டுநர் வேலைக்குச் சென்று, மாதக்கணக்கில் அங்கேயே தங்கி வேலை செய்துவிட்டு, அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம், பெங்களூர், சர்ஜாபுரா பகுதியில், ஜேசிபி வாகனம் மூலம் நிலத்தைச் சமன் செய்து பிளாட்டுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பணியின்போது, வித்தியாசமான கல் ஒன்று தென்பட்டுள்ளது. அதைப் பார்த்த மாரப்பா, அதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த மாதப்பனை அழைத்து, "இந்தக் கல் அரிய வகை கல்லாகவும் வித்தியாசமாகவும் உள்ளது, என்ன செய்யலாம்?" எனக் கேட்டுள்ளார். அதற்கு மாதப்பன், "முதலில் இந்தக் கல்லை நமது சொந்த ஊரான அஞ்செட்டி அருகிலுள்ள தொட்டமஞ்சு கிராமத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவோம்" எனக் கூற, இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, அந்த 200 கிலோ எடைகொண்ட அரிய வகை கல்லை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, சொந்த ஊரான தொட்டமஞ்சு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். மேலும், இந்தக் கல்லை எப்படியாவது அதிக விலைக்கு விற்று கோடீஸ்வரராக வேண்டும் என இருவரும் கனவு கண்டு, கோட்டை கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

Advertisment

அந்த அரிய வகை கல்லை, பெங்களூர், ஆனெக்கல் பகுதியில் உள்ள மாதப்பனின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து, அங்கிருந்து புரோக்கர்கள் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு, அந்தக் கல்லை விற்பனை செய்ய முயற்சித்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கல்லை வாங்க ஒரு பார்ட்டி வருவதாக வந்த தகவலை அடுத்து, மாரப்பாவை ஊரிலேயே விட்டுவிட்டு, மாதப்பன் மட்டும் அங்கு சென்றுள்ளார். மேலும், கல் உண்மையாகவே அரிய வகையா எனச் சோதிக்க வேண்டும் என பார்ட்டி கூற, உடனடியாக மிஷின்கள் வரவழைக்கப்பட்டு, 200 கிலோ எடைகொண்ட கல்லை அறுத்து சோதனை செய்தனர்.

சோதனையில், அது சாதாரண கிரானைட் கல் எனத் தெரியவந்தது. 200 கிலோ எடைகொண்ட கல்லை வைத்து என்ன செய்வது எனக் கூறிவிட்டு, கல்லை வாங்க வந்த பார்ட்டியும் சென்றுவிட, இந்தத் தகவலை மாரப்பாவிடம் மாதப்பன் கூறிவிட்டு, கல்லை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அங்கிருந்து வந்த சில நாட்களிலேயே, டிரைவர் வேலைக்குச் செல்லாமல், மாதப்பன் சொந்தமாக விஷேசங்களுக்கு பயன்படுத்தும் டென்ட், சீரியல் செட் மற்றும் விழாக்களுக்கு பயன்படுத்தும் பந்தல் அலங்காரக் கடை வைத்துள்ளார். மேலும், ஆடம்பரமாகவும் வாழத் தொடங்கியுள்ளார். கல்லை மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டு, தன்னை ஏமாற்றி, பணம் எதுவும் தராமல், ஒருவனே எடுத்துக்கொண்டு, தற்போது அலங்கார பந்தல் அமைக்கும் கடை வைத்து ஆடம்பரமாக வாழ்வதாக நினைத்த மாரப்பா, பெங்களூரிலிருந்து கடந்த 18-ம் தேதி அஞ்செட்டி அருகிலுள்ள தொட்டமஞ்சு கிராமத்திற்கு வந்து, மது குடித்துவிட்டு, கத்தியுடன் மாதப்பனைத் தேடியுள்ளார்.

அப்போது, சித்தப்பனூர் ஏரிக்கரையில் மது அருந்திக்கொண்டிருந்த மாதப்பனிடம் சென்ற மாரப்பா, “நான் பெங்களூருக்கு சென்று ஜேசிபி ஓட்டி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்; நீ என்னை ஏமாற்றிவிட்டு, என் பணத்தையெல்லாம் வைத்துக்கொண்டு, நீ மட்டும் சந்தோஷமாக வாழுறியா? என்னை நீ முதுகில் குத்தி, நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்” எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தனது பைக் டேங்க் கவரில் வைத்திருந்த கத்தியை எடுத்து, மாதப்பனின் மார்பில் 5 முறை குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக மாரப்பா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர், போலீசார் ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் பதுங்கியிருந்த மாரப்பாவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தருமபுரி சிறையில் அடைத்தனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், சந்தேகத்தால் சக நண்பனை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.