கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது ஜி.பி. தாங்கல் கிராமம். இந்த கிராமத்தில் 5 ஆம் தேதி காலை முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சிலர், மணலூர்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு, அந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
அதில், உயிரிழந்த நபர் சாங்கியம் கிராமத்தின் ஊராட்சி செயலர் அய்யனார் எனபது தெரியவந்தது. அதன்பிறகு சந்தேகமரணம் சென்று வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணைத் தொடர்ந்தனர். 4 ஆம் தேதி நள்ளிரவு அய்யனாரை அவரது நண்பர் ஐயப்பன் என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், ரத்தவெள்ளத்தில் அய்யனார் கிடந்த பகுதியிலெயே ஐயப்பனின் கோழிப்பண்ணை இருந்ததையும் போலீசார் கண்டுப்பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஐயப்பனின் கோழிப்பண்ணைக்கு போலீசார் சென்றனர். அங்கு மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த ஐய்யப்பனை எழுப்பிய காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்கு பின்னாக பதிலளித்த ஐயப்பன் மாலை வரை தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு போலீஸார் தங்களின் ஸ்டைலில் விசாரித்தபோது, தனது நண்பர் அய்யனாரை ஐயப்பனே கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ஐயப்பனும், அய்யனாரும் மது அருந்திக்கொண்டிருந்த போது, ஐய்யப்பனின் இரண்டாது மகள் காணாமல் போனது குறித்து இருவரும் பேசுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகே இருந்த கத்தியை எடுத்து ஐயப்பன், அய்யனாரை குத்தி கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்பிறுகு சந்தேகமரணம் என்பதை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ஐயப்பனை கைது செய்து, இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஊராட்சி செயலர் அய்யனார் கொலைக்கு நீதிகேட்டு அவரது உறவினர்கள் மணலூர்பேட்டை - திருகோவிலூர் சாலையில் அமர்ந்து மூன்று மணிநேரம் மறியலில் ஈடுப்பட்டனர். அதேபோன்று ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பில் திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது
மது அருந்த அழைத்துச் சென்று ஊராட்சி செயலரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.