திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணைப் பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தது. இதனைக் கால்நடை மேய்க்கச் சென்றவர்கள் கண்டு, வெள்ளக்கோவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது; கை, கால்களில் பலத்த காயங்கள் இருந்தன. மேலும் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், “யார் இந்தப் பெண்ணை எரித்துக் கொன்றார்? முன்விரோதம் காரணமா? அல்லது நகை, பணத்திற்காகவா?” என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடினர். முதற்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த வடிவுக்கரசி எனத் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் கிடந்த மதுபாட்டிலை கைப்பற்றி, அதில் இருந்த QR கோடு மூலம் இந்த மதுபாட்டில் எங்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணையைத் துரிதப்படுத்தினர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமாக பழனி அ.கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சங்கர் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சங்கர் காவல்துறையில் காவலராகக் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கர் காவல்துறையில் சேர்ந்து வெறும் 15 ஆண்டுகளே பணியாற்றியுள்ளார். அதன்பிறகு 1998-ல் விருப்ப ஓய்வு பெற்ற அவருக்கு 4 மனைவிகள், 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் திருமணத்தை மீறிய உறவில் பெண் தோழிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் சடலமாகக் கிடந்த வடிவுக்கரசியும் ஒருவர். பல்வேறு பகுதிகளில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி சங்கர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதில் தனது உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி சங்கரிடம் கொடுத்துள்ளார் வடிவுக்கரசி. நாளடைவில் “அரசு வேலை வாங்கிக்கொடு, இல்லையெனில் உறவினர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடு” என வடிவுக்கரசி வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் கொடுக்காவிட்டால் போலீசில் புகார் அளிப்பதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சங்கர், “இரண்டு நாட்களில் தருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி வெள்ளக்கோவில் அருகே உள்ள ஊரில் “எனக்குப் பணம் தருபவர்கள் இருக்கிறார்கள், போய் வாங்கி வருவோம், நீயும் கூடவா” என வடிவுக்கரசியை அழைத்துள்ளார். இதை நம்பி வடிவுக்கரசி சங்கருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். பின்னர் “பணம் தருபவர்கள் வர சிறிது நேரம் ஆகும், இங்குள்ள அணையைச் சுற்றிப் பார்க்கலாம்” எனக் கூறி வட்டமலைக்கரை அணை ஓடையின் மேல் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மதியம் அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் அருகே கிடந்த கல்லால் வடிவுக்கரசியின் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்து அரை உயிருடன் சரிந்து கிடந்த வடிவுக்கரசியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகைகளைப் பறித்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் சிசிடிவி காட்சிகளில் வட்டமலைக்கரை அணைக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் வருவதும், திரும்பிச் செல்லும்போது சங்கர் மட்டும் செல்வதும் பதிவாகியிருந்தது. அனைத்து ஆதாரங்களையும் திரட்டிய போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னாள் காவலரே கொலை குற்றவாளி என்பது வெள்ளக்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/aunty-2025-12-10-18-50-35.jpg)