பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற ஒரு மாதத்திலேயே செபாஸ்டியன் லெகோர்னு திடீரென ராஜினாமா செய்திருப்பது உலக அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பிரதமராக பதவி வகித்த பிராங்காய்ஸ் பேருக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து மீண்டும் தேர்தல் நடத்துவதை தவிர்க்க அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரோன், பாதுகாப்பு அமைச்சரான செபாஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார்.
இமானுவேல் மெக்ரோனின் தீவிர ஆதரவாளரான செபாஸ்டியன், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அவரது ஒவ்வொரு அரசாங்கத்திலும் பணியாற்றி வந்தார். அதிபர் மெக்ரோன் நியமித்ததன்படி, கடந்த மாதம் பிரதமராக பதவியேற்ற செபாஸ்டியன் லெகோர்னு கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது அமைச்சரவையை அறிவித்தார். அதில், ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவை பட்டியல், எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. வலதுசாரி ஆதரவாளர்களுக்கு அமைச்சரவை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் பாராளுமன்றத்தில் எந்த குழுவும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை என்றும் எதிர்த்தனர்.
இந்த நிலையில், அமைச்சரவையை அறிவித்த சில மணி நேரங்களிலே செபாஸ்டியன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தைல் அதிபர் இமானுவேல் மெக்ரோன் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமராக பதவியேற்ற செபாஸ்டியன், வெறும் 27 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.