French President speaks to Trump on the phone in the middle of the road
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) நியூயார்க்கில் நேற்று (23-09-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரத்திற்கு ஆதரவு தெரிவித்தார். நீண்ட நேரம் உரையாற்றியதற்கு பிறகு அவர், ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கான்வாய் வருவதால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கான்வாய் செல்வதாகக்கூறி பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் வாகனத்தை நியூயார்க் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் நீண்ட நேரமாக காரிலேயே மேக்ரான் காத்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர், பொறுமையிழந்த அதிபர் மேக்ரான் தனது காரில் இருந்து இறங்கி நேராக போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் அதிகாரிகள், ‘மன்னிக்கவும், நான் மிகவும் வருந்துகிறேன். இப்போது எல்லாம் உறைந்துவிட்டது. இப்போது இந்த வழியில் ஒரு மோட்டார் அணிவகுப்பு வருகிறது. மன்னிக்கவும்’ என்று கூறினார்கள். இதற்கு பதிலளித்த மேக்ரான் சாலையின் குறுக்கே சுட்டிக்காட்டி, “நீங்கள் மோட்டார் அணிவகுப்பை பார்க்கவில்லை என்றால், என்னை செல்லவிடுங்கள்” என்று கூறினார்.
இதையடுத்து அவர் நடு ரோட்டிலேயே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைப்பேசி மூலம் அழைத்து, “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்னவென்று கண்டுபிடியுங்கள்? அனைத்து உங்களுக்கு நிறுத்தப்பட்டிருப்பதால் நான் தெருவில் காத்திருக்கிறேன்” என்று பேசியபடி அரை மணி நேரம் நடந்தே தூதரக அலுவலகத்திற்குச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow Us