Fourth day of interrogation - Nikita, DSP present? Photograph: (police)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் மூன்றாவது நாளாக நேற்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்றும் நான்காவது நாளாக விசாரணையானது நீதிபதி ஜான் சுந்தர் தலைமையில் தொடங்கியுள்ளது. இன்றைய விசாரணையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் உள்ளிட்டோரிடம் நீதிபதி ஜான் சந்தர் விசாரணை தொடங்கி இருக்கிறார். இந்த விவகாரத்தில் நிகிதா நேரடியாக புகார் கொடுத்தாரா அல்லது தொலைபேசி மூலம் புகார் கொடுத்தாரா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்று நடைபெறும் விசாரணையில் டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் புகார் கொடுத்த நிகிதா ஆகியோர் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.