வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்பாடி ரயில் நிலையம் அருகே, போதை மாத்திரை வைத்திருப்பதாகக் கூறி, கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு பெண் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்ததாக, திகார் சிறையில் பணிபுரியும் ஒரு சிறைக் காவலரையும் காட்பாடி காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், தனிப்படைக் காவல்துறையினர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்குச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த நிகிதா ஹேமந்த் டோங்டி (26), கிரிஷ் டோங்டி (27), நிகில் ராஜேஷ் (34), சென்னை, தரமணியைச் சேர்ந்த வினோத் குமார் (27) ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2,100 போதை மாத்திரைகளையும் 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று பேரை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், நிகிதா ஹேமந்த் டோங்டி என்ற பெண்ணை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் அடைத்தனர்.