திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கீழ்குடி பகுதியில் காவிரியின் கிளை நதியான புத்தாறு ஓடி வருகிறது. தற்போது மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் கனமழை பொழிந்து வருவதால் புத்தாற்றில் நீர்வரத்து சற்று அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கீழ்குடி பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் நான்கு பேர் திடீரென உள்ளே இறங்கி குளிக்க முயன்றுள்ளனர்.

அப்போது நான்கு பேரும் நீரில் மூழ்கினர். இதனைக் கண்டு அந்த பகுதி பொதுமக்கள் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது. உடனடியாக நன்னிலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த மீட்புப் படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி நான்கு இளைஞர்களையும் சடலமாக மீட்டனர். நான்கு பேரின் உடலும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர்கள் வெளியூரை சேர்ந்தவர்களா? அவர்களுடைய விவரம் என்ன? என்பது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.