Advertisment

'இந்திக்கு நான்கு நாள்; தமிழுக்கு மட்டும் ஒருநாளா?'-அன்புமணி கண்டனம்

a4873

'Four days for Hindi; one day for Tamil?' - Anbumani condemns Photograph: (pmk)

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வவில் இந்திக்கு 4 நாள் இடைவெளியும் தமிழுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் இடைவெளி விட்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் இதனை பாமகவின் அன்புமணி கண்டித்துள்ளார்.

Advertisment


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில்  இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு  ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொத்த்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி ஆங்கிலம், 23ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25 ஆம் தேதி அறிவியல், 27 ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2ஆம் தேதி இந்தி, மார்ச் 7ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.

பிப்ரவரி 21 ஆம் நாள் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23 ஆம் நாள் தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கு போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு மட்டுமின்றி, உருது, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய பாடத் தேர்வுகளும் பிப்ரவரி 23ஆம் நாள் நடைபெற இருப்பதால் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை இந்த பாடங்களின் மாணவர்களும் எதிர்கொள்வர்.

மாறாக, இந்தி பாடத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி தான் நடைபெறும் என்பதால், அப்பாடத்தைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வுக்கும், அறிவியல் தேர்வுக்கும் இடையில் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் அறிவியல் தேர்வுக்கு நன்றாக படிக்க முடியும். அதேபோல், இந்தி பாடத் தேர்வுக்கு முந்தைய கணினி அறிவியல் பாடத் தேர்வுக்கு இரு நாள்களும், பிந்தைய சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 4 நாள்களும் இருப்பதால் அந்தப் பாடங்களை அவர்களால் நன்றாக படிக்க முடியும். இந்தித் தேர்வுக்கு இரு நாள் இடைவெளி இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியும்.

பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணை இரண்டாம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு பாதகமாகவும்  அமைந்திருக்கிறது. இது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரானது ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.

எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ தயாரித்துள்ள தேர்வு அட்டவணையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். 

tamil hindi CBSE schools education anbumani ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe