கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலையில் இரண்டு டாரஸ் லாரிகள் மோதி கொண்டதை தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு கார்கள் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வரை சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வப்போது அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஓசூர் பகுதியில் உள்ள பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மாற்று வழியில் வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சூளகிரி அடுத்துள்ள சானமாவு வனப்பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த நான்கு கார்கள், இரண்டு கார் லாரிகள் என வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பித்துள்ள நிலையில் மீட்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பால் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.