முன்னாள் முதல்வர் காமராஜர், கடந்த 1966ஆம் ஆம் ஆண்டு டெல்லியில் தங்கியிருந்த போது அவரது வீட்டை, தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் காமராஜர் உயிர் தப்பினார்.  இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜரின் உருவச் சிலைக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது, அவரும், கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகளும் கருப்பு சட்டை அணிந்து மரியாதை செலுத்தினர்.  

Advertisment

காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தும் போது கருப்பு சட்டை அணிந்து மரியாதை செலுத்தியதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். காமராஜ் சிலைக்கு மரியாதை செலுத்தும் போது கருப்பு சட்டை அணிந்த மனோ தங்கராஜ் ஒரு தேச துரோகி என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisment

இதனிடையே, கடந்த 10ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “1966ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி காமராஜரின் தங்கியிருந்த வீட்டை தீயிட்டு அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முயற்சியாக அன்றைக்கு இருந்த ஜன சங்கமும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் மதவாத அமைப்பும் சேர்ந்து டெல்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டை தீ வைத்து கொளுத்தினார்கள். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என பலர் முயற்சித்த நேரத்தில் அதை காமராஜர் ஏற்றுகொள்ளவில்லை. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டை தீயிட்டு கொளுத்தினார்கள். இது வரலாற்று உண்மை. ஆர்.எஸ்.எஸ் கோட்ப்பாட்டை பற்றி பேசினாலோ, அதை ஆதரித்தாலோ எந்த சூழ்நிலையிலும் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டனாக இருக்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க காமராஜரை பயன்படுத்துவது எந்த விதத்திலும் காமராஜர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

காமராஜரை ஆர்.எஸ்.எஸ் கொலை செய்ய முயன்றது என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அவரை கண்டித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். காமராஜர் பெயரை தனது அரசியல் லாபத்திற்கு மனோ தங்கராஜ் உள்ளிட்ட திமுகவினர் பயன்படுத்துகிறார்கள் என அவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினரை போலீசார் கைது செய்துள்ளானர்.  

Advertisment