இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு கடந்த 2022இல் மாபெரும் போராட்டம் வெடித்தது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறினார். அதன் பின்னர், இலங்கையில் இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே கடந்த 2022இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அதிபர் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று 2024 வரை இலங்கை அதிகராக பொறுப்பு வகித்து வந்தார்.
ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவி காலத்தில் தனிப்பட்ட காரணங்களுக்கு அவர் அரசு பணத்தை செலவழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, ரணில் விக்ரமசிங்கேவின் மனைவி மைத்திரி கடந்த 2023இல் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரணில் விக்ரமசிங்கே அரசு பணத்தில் லண்டன் பயணம் மேற்கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (22-08-25) காலை ரணில் விக்ரமசிங்கே சிஐடி அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாகக் கூறப்படுகிறது. அதன்படி ரணில் விக்ரமசிங்கேவை சிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.